கல்லார்க்கும் கற்றவர்க்குங் களிப்பருளுங் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்குங் கண்ணளிக்குங் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்குஞ் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே
என்னரசே யான்புகழு மிசையுமணிந்தருளே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!