கொன்றை வேந்தன் - உயிர் வருக்கம் [Kondrai Vendhan - Uyir Varukkam]

உயிர் வருக்கம்

01. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
பொருள்: பெற்ற தாயும் தந்தையும் நம் கண்கண்ட கடவுள்களாவர்.

02. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
பொருள்: கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்தது.

03. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
பொருள்: மனைவியோடு சேர்ந்த குடும்ப வாழ்வே சிறந்தது; மற்ற வாழ்வு அற வாழ்வு ஆகாது.

04. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
பொருள்: ஈகை செய்யாதவர்களின் பெருஞ் செல்வத்தை தீயவர்கள் கவர்ந்து செல்வர்.

05. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
பொருள்: உணவை குறைவாக, அளவாக உண்பது பெண்களுக்கு அழகுத் தரும்.

06. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
பொருள்: ஊரை பகைத்தால் அடியோடு அழிய நேரிடும்.

07. எண்ணும் எழுதும் கண் எனத் தகும்
பொருள்: கணிதமும் இலக்கியமும் நம் இரு கண்களைப் போன்றவையாகும்.

08. ஏவா மக்கள் மூவா மருந்து
பொருள்: பிறர் கூறாமலையே குறிப்புணர்ந்து செயல்படுவோர் தேவமிருதத்திற்கு நிகரானவர்கள்.

09. ஐயம் புகினும் செய்வன செய்
பொருள்: பிச்சை எடுத்தாகிலும் நல்ல காரியங்களைச் செய்.

10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு
பொருள்: ஒருவனை கணவனாகத் தேர்ந்தெடுத்து அவனுடனேயே பெண் என்பவள் வாழவேண்டும்.

11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
பொருள்: வேதியர்களுக்கு வேதம் ஓதுவதைவிட ஒழுக்கம் இன்றியமையாதது.

12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
பொருள்: பொறாமைக் கொண்டு பேசுவது செல்வத்திற்கு அழிவைத் தரும்.

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
பொருள்: சிக்கனத்தைக் கடைப்பிடித்து தானியம், செல்வம் ஆகியவற்றை சேர்த்துவை.