அபிராமி அந்தாதி [Abirami Anthathi]

கள்ளவாரணப் பிள்ளையார் காப்பு

தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகு ஏழும்பெற்ற
சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.

மார்பில் கொன்றை மாலையையும் சண்பக மாலையையும் முறையே அணியும் தில்லைத்திருநகரத்து எம்பெருமானுக்கும் அவர் ஒரு பாகம் அகலாத உமையம்மைக்கும் மைந்தனாய் விளங்கும் கள்ளமிகு பேரழில் கணபதியே, ஏழுலகம் பெற்ற பெருமைமிகு அபிராமி அம்பிகையைப் போற்றும் அந்தாதி என் மனத்தில் இடைவிடாது நிற்க வாழ்த்தியருள்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.

தன் நிறத்தால் உதயசூரியன், மஞ்சாடி மலர், தன்மை உணர்ந்தவர்கள் போற்றும் மாணிக்கம், மாதுளை மொக்கு, கொடி மின்னல், மணமிகு குங்குமக் குழம்பு ஆகியவைகளை நிகர்த்து விளங்குகின்ற, மென்மலரில் வாழும் திருமகளும் போற்றுகின்ற, சிறந்த திருமேனியையுடைய அபிராமி தேவியே என்றும் எனக்குத் துணையாவாள்.
[01]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

துணையும் தொழுந்தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணியும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கறுப்புச் சிலையுமென் பாசாங் குசமும்கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே.

குளிர்ந்த மலர் அம்பும் கரும்பு வில்லும் மெல்லிய பாசமும் அங்குசமும் கைகளில் அலங்காரமாகப் பிடித்திருக்கும் திரிபுர சுந்தரியே எங்களுக்குத் துணை, யாம் தொழும் தெய்வம்; எங்களைப் பெற்ற தாய்; வேதமாகவும் அவற்றின் கிளைகளாகவும் கொழுந்துகளாகவும் அவை பதிந்த வேர் ஆகவும் விளங்குகிறாள். அத்தகைய அபிராமி தேவியின் திருவருளாலே இவற்றை யாம் உணர்ந்தோம்.
[02]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன்நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறித்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே.

அருட்செல்வத்தை அன்பர்க்கு அள்ளி வழங்கும் அபிராமித் தாயே, நின் அடியவர்களின் பெருமையை மனத்தாலும் எண்ணாத தீவினைமிக்க நெஞ்சம் காரணமாக மீண்டும் மீண்டும் நரகத்தில் வீழ்ந்து வருந்தும் மக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன்; அதனால் ஒருவரும் உணராத மறை பொருளை உணர்ந்தேன்; அவ்வாறு உணர்ந்ததால் உன் திருவடியே அடைக்கலம் என்று பற்றிக் கொண்டேன்.
[03]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

மனிதர்கள், தேவர்கள், மரணபயம் துறந்த முனிவர்கள் முதலியோர் வந்து தலையால் வணங்கும் பெருமை பெற்ற சிவந்த பாதங்களுடைய, என்றும் இளமைமிகு, அபிராமிதேவியே, கொன்றை மாலையணிந்த சடையின்மேல் குளிர்ந்த நிலவும் பாம்பும் கங்கையும் அணிந்த புனிதமிகு பரமனும் நீயும் என் மனத்தில் இடையறாது வீற்றிருந்தருளவேண்டும்.
[04]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

அபிராமி தேவியின் உயிர்களுக்கு ஆதாரமான மூவகை நிலைகள் யாவற்றிலும் பேதமின்றி நிறைந்திருக்கும் திரிபுரசுந்தரி; மாணிக்கச் செப்பு போன்ற மார்பகங்களின் சுமையால் வருந்துவது போன்று விளங்கும் வஞ்சிக் கொடிபோன்ற இடையையுடைய மனோன்மணி; நீண்ட சடாமுடியுடைய சிவபெருமான் அருந்திய நஞ்சையும் அமுதமாக மாற்றிய உமாதேவி; பேரழகி; பராகாச வடிவுடையாள்; அவ்வம்பிகையின் தாமரையைக் காட்டிலும் மெல்லிய திருவடிகளை என் தலைமேற்கொண்டேன்.
[05]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னியது உன்பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே
முன்னிய நின்அடி யாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே.

செந்நிறம் பொருந்திய திருமேனியுடைய அபிராமியம்மையே, நினது பொலிவுமிக்க திருவடித் தாமரைகள் என் தலை மேலான; நினது மூலமந்திரம் என் நெஞ்சினுள்ளே நிலைபெற்று விளங்குகின்றது; நின்னையே மறவாது தொழும் அடியார்களுடன் கலந்து ஆராய்ந்து முறையாகப் பலகாலும் யான் பாராயணம் செய்தது நினது மேலான ஆகம நெறியேயாகும்.
[06]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ததியுறு மத்திற் சுழலும்என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே.

தாமரை மலர்மேல் வாழ்கின்ற பிரமதேவனும், பிறையணிந்த பெம்மானும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற திருவடிகளையுடைய அபிராமியே! சிந்தூர திலகம் விளங்கும் திருமுகமுடைய சுந்தரியே! தயிரைக் கடையும் மத்து சுழல்வது போல் பிறப்பு, வாழ்வு, இறப்பு எனச் சுழலும் என் உயிர் அவ்வாறு சுழன்று வருந்தாமல் நல்லதொரு கதியையடையுமாறு அருள் புரிவாயாக.
[07]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுந்தரி எந்தை துணைவிஎன் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தி நாள்மகி டந்தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரண்தொன்
கந்தரி கைத்தலத் தாள்மலர்த் தாள்என் கருத்தனவே.

அபிராமி தேவி பேரழகி; எந்தைச் சிவபிரான் துணைவி என் அகப்பற்று புறப்பற்று ஆகிய யாவற்றையும் போக்குகின்ற செந்நிறத் திருமேனி உடையவள்; மகிஷாசுரனின் தலைமேல் நின்று அவனை அழித்தவள்; நீலநிறமுடையாள்; என்றும் கன்னி; பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவள்; அவ்வம்பிகையின் மலர் போன்ற பாதங்களை எப்போதும் தியானிக்கின்றேன்.
[08]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற்
பொருந்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும்அம்மே வந்தென் முன்நிற்கவே.

அபிராமி தேவியே! எந்தைச் சிவபிரான் கண்களிலும் கருத்திலும் விளங்குவனவும் நன்னிறம் கொண்ட கனகமலை போலும் கவின் பெற்றனவும் அழுத பிள்ளைக்கு பால்நல்கியவையும் ஆகிய பேரருள் மிக்க மார்பகங்களும், அவற்றின்மேல் அசையும் மாலையும், செங்கைகளில் வில்லும் அம்பும், திருமுகத்தில் முருந்து போல் முத்துப்பற்களும் விளங்கித் தோன்ற எனக்குக் காட்சியளித்தருள வேண்டும்.
[09]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனத்தமே.

எழுதப்படாமல் காதின் வழியாகவே கேட்டுக் கற்கப்படும் பெருமை வாய்ந்த வேதத்தின் முடிவிற் பொருந்திய பொருளே! அருளே உருவான அபிராமியே! உமையே! இமயமலையில் அக்காலத்தில் பிறந்தவளே! அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! நான் நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நினையே தியானிக்கின்றேன்; உனது மலர் போன்ற பாதங்களையே வணங்குகின்றேன்.
[10]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆனந்தமாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவு உடையாள் மறைநான்கினுக்கும்
தானந்த மான சரணாரவிந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான்முடிக் கண்ணியதே.

மண், நீர், நெருப்பு, காற்று, வெளி என்ற பஞ்சபூத வடிவாயிருப்பவளான அபிராமிதேவி, நிறைந்த அமிர்தமாகவும் அறிவாகவும் ஆனந்தமாகவும் எனக்கு விளங்குகிறாள்; வேதாந்த முடிவுக்கும் எட்டாத அம்பிகையின் திருவடித் தாமரைகள் திருவெண்காட்டில் திருநடமிடும் எம்பிரானின் தலைமாலையாக விளங்குகின்றன.
[11]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன்இரு பாதாம் புயத்தில் பகல்இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன்செய்த
புண்ணியம் ஏதுஎன் அம்மே புவிஏழையும் பூத்தவளே.

ஏழுலகையும் பெற்றவளே! என் அபிராமித் தாயே! யான் எப்போதும் நினைப்பது உன் புகழே; கற்பது உன் நாமமே; மனம் நெகிழ்ந்து பக்தி செய்தது உன் திருவடித் தாமரைகளிலேயே; இரவும் பகலுமாக அணுகிச் சேர்ந்திருந்தது உன் அடியார் திருக்கூட்டத்திலேயே. இத்தகைய உயர்ந்த நிலையை யான் பெறுவதற்கு நான் செய்த புண்ணியம் தான் என்னவோ?
[12]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றேர்தெய்வம் வந்திப்பதே.

பதினான்கு உலகையும் பெற்றவளே! அவற்றைக் காத்தவளே! பெற்றபடியே அவற்றைத் தன்னுள் ஆக்கியவளே! கறைக்கண்டனாகிய சதாசிவனுக்கு மூத்தவளே! முகுந்தனாகிய திருமாலுக்குத் தங்கையே! பெரிய தவத்திற்குத் தலைவியாகிய அபிராமித் தாயே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்குவதா?
[13]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.

எம்பிராட்டி! அபிராமி தேவியே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள் அசுரர்கள் முதலியோர்; மனதில் ஒருமுகமாக தியானிப்பவர்கள் பிரமனும் விஷ்ணுவும்; மனத்தில் கட்டுபவர் அழியாத பரமானந்தராகிய சிவபிரான்; ஆயினும், நின்னை வணங்கித் தரிசனம் செய்வோர்க்கு எளிதில் அருள் புரிகின்றாய். நின் கருணைதான் என்னே!
[14]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தண்ணளிக் கென்று முன்னே பலகோடி தவங்கள்செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர்தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றே
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

இசைப்பது போலும் இன்சொற் கூறும் பசுங்கிளியாகிய அபிராமி அம்மையே! நின்னுடைய திருவருள் நாடிப் பலகோடி தவங்கள் செய்தவர்கள் இவ்வுலகை அரசாட்சி ஒன்று மாத்திரமா பெறுவர்? சிறந்த தேவருலகை ஆளும் பேறும், அழியாத முக்தியாகிய வீட்டின்பமும் அல்லவா பெறுவர்?
[15]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

கிளியென விளங்கும் அபிராமித் தாயே! அடியார்களின் மனத்தகத்தே விளங்கித் தோன்றும் ஒளியே! ஒளிரும் ஒளிக்கெல்லாம் மூலகாரணமாக இருப்பவளே! ஆராய்ந்தால் ஒன்றுமில்லாத பராகாச வடிவாய் இருப்பவளே! விண், வளி, தீ, நீர், மண் என முறையே விரிந்து நிறைந்த தாயே! எளியவனாகிய என் சிற்றறிவுக்கு எட்டுமாறு நீ அளவுபட்டு நின்றது பேரதிசயமே.
[16]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதிசயமான வடிவு உடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தர வல்லி துணைஇரதி
பதிசயமானது அபசய மாக முன் பார்த்தவர்தம்
மதிசயமாக வன்றே வாம பாகத்தை வவ்வியதே.

அபிராமி தேவி அதிசயமான அழகுடையவள்; தாமரை மலர்கள் எல்லாம் துதிக்கும் வெற்றிமிகு முகத்தழகு கொழிக்கும் கொடி போன்றவள்; அத்தகைய அம்பிகை, இரதி மணாளனாகிய மன்மதன் பெற்ற வெற்றிகள் எல்லாம் தோல்வியாகும்படி நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்த எம்பிரானின் மனத்தைக் குழைத்து அவரை வெற்றி கொள்ளத்தானே அவருடைய இடப்பாகத்தை கவர்ந்துகொண்டருளினாள்.
[17]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே.

அபிராமித் தாயே! கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும்போது, அர்த்தநாரீஸ்வரராக நீங்கள் கொண்டிருக்கும் கோலமும் விரிந்து நின்ற திருமணக் கோலமும் என் மனத்தினின்றும் இகப்பற்றையும் புறப்பற்றையும் அகற்றி என்னை ஆட்கொண்ட பொற்பாதமும் ஆகி இருவரும் வந்து காட்சியளித்தருளவேண்டும்.
[18]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெளிநின்ற நின்திரு மேனியைப் பார்த்தென் விழியும்நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

ஒளிமிக்க கோணங்கள் ஒன்பதிலும் பொருந்தி உறைகின்ற அபிராமித் தாயே! வெளிப்பட்டு நிற்கின்ற நினது திருமேனியைக் காட்சியுற்று என் விழிகளிலும் மனத்திலும் உண்டான மகிழ்ச்சி வெள்ளத்திற்கு ஒரு கரைகாண இயலவில்லை; ஆயினும், மனத்திலே தெளிந்த ஞானம் விளங்கித் தோன்றுகின்றது; இஃது நினது திருவருட் பயனேயன்றோ?
[19]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உறைகின்ற நின்திருக் கோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரனசல மங்கலையே.

நித்திய கல்யாணியாகிய அபிராமி அம்மையே! நீ எழுந்தருளியிருக்கும் திருகோயில் நினது கணவராகிய சிவபிரானின் ஒரு பாகமோ? வேதங்களின் முதலோ? முடிவோ? அமிர்தம் நிறைந்து பொங்கும் வெண்ணிலவோ? வெண்டாமரையோ? இந்திரனுடைய செல்வமெல்லாம் மறைந்து கிடக்கும் பாற்கடலோ? என்னுடைய மனமோ?
[20]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே.

அபிராமி தேவி என்றும் சுமங்கலி; செங்கலசம் போன்று கவின்மிகு மார்பகங்களை உடையவள்; மலையரசன் மகள்; வெண்சங்கு வளையல்கள் ஒலிக்கும் செங்கை உடையவள்; சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவள்; அலைதாவி நுரை பொங்கும் கங்கையைச் சடாமுடியில் தரித்த சிவபெருமானின் ஒரு பாகத்தில் அமர்ந்தவள்; என்னை ஆண்டுகொண்டவள்; அந்த அபிராமி அம்மையை பொன்னிறமுடையவளாகவும், கருநிறமுடையவளாகவும், செந்நிறமுடையவளாகவும், வெண்ணிற முடையவளாகவும், பசும்பெண்கொடியாகவும் விளங்குகின்றாள்.
[21]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பேபழுத்த
படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்றஅம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

இளைய வஞ்சிக் கொடியே! பொற்கொம்பே! யான் பக்குவம் அற்றவன் ஆயினும் எனக்குக் கிடைத்த கனியே! வேதத்தால் உணர் பொருளே! பனிமிகு இமயமலையில் தோன்றிய பிடியே! பிரமன் முதலிய எல்லாத் தேவர்களையும் பெற்றெடுத்த அபிராமித் தாயே! அடியேன் இம்முறை இறந்தபின் மேலும் பிறக்காமல் அருள் பாலிப்பாயாக.
[22]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது அன்பர்கூட்டந்தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளியேஎன் கண்மணியே.

மூன்றுலகங்கட்கு உள்ளேயும் யாவற்றினுக்கும் வெளியேயும் என் உள்ளத்திலும் செழுமையாகத் தோன்றிய பேரின்பமாகிய தேனே! அடியவர்கள் உணர்ந்து களிப்புறும் களிப்பே! எளியவனாகிய என் கண்மணி போன்ற அபிராமி தேவியே! நின்னுடைய சிறந்த திருமேனிக் கோலமன்றி வேறொன்றையும் மனத்தால் நினைக்கமாட்டேன்; நின்னுடைய மெய்யடியார் திருகூட்டத்தினின்றும் பிரியமாட்டேன்; பிற சமயங்களையும் விரும்பமாட்டேன்.
[23]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.

மாணிக்கமே! அம்மாணிக்க மணியில் தோன்றும் ஒளியே! ஒளி மிகும் அம்மாணிக்கங்கள் பதித்த அணியே! இந்த அணிகலன்களுக்கும் அழகு கொடுக்கும் அணியே! நின்னைச் சரணடையாதவர்க்குப் பிணியே! சரணடைந்தால் அப்பிணிக்கு மருந்தே! தேவர்களுக்குப் பெருவிருந்தாய்த் தோன்றும் அபிராமி தேவியே! நின்னுடைய தாமரை மலர் போன்ற பாதத்தில் பணிந்த பின்னர் வேறொருவரையும் வணங்கமாட்டேன்.
[24]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பின்னே திரிந்துஉன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனிஉன்னை யான்மறவாமல் நின்று ஏத்துவனே.

மும்மூர்த்திகளுக்கும் தாயே! மூவுலகுக்கும் அபிராமி என்ற பெயர் கொண்ட அருமருந்தே! நின் அடியார் பின்னே சென்று அவரைப் போற்றி என் பிறப்பைப் போக்கிக்கொள்ளத் தேவையான தவங்கள் பலவும் முன்னமேயே முயன்று செய்து முடித்துக் கொண்டேன்; அத்தவம் காரணமாகவே அப்பிறவியில் நின்னை மறவாமல் போற்றுகின்றேன்; இனி எனக்குக் குறையேது?
[25]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஏத்தும் அடியவர் ஈரே ழுலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல்அணங்கே மணம்நாறும் நின்தாள்இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே.

மணமிக்க கடம்ப மாலையை அணிந்த அபிராமித் தாயே! நின்னைப் போற்றிப் புகழ்பவர்கள் பதினான்கு உலகையும் படைத்தும் காத்தும் அழித்தும் அரிய தொழில் புரியும் மும்மூர்த்திகள் ஆவர்; எனினும் நின் திருவடிகளில் என் நாவினின்றும் தோன்றிய வளமற்ற மொழியாகிய பாமாலை ஏற்றம் பெற்றிருப்பதைக் காண எனக்கே நகையுண்டாகிறது.
[26]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும்அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணிஎனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கைஎல் லாம்நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

அபிராமி தேவியே! என் நெஞ்சத்திருந்த ஆணவம், கன்மம், மாயை என்ற அழுக்குகளையெல்லாம் நினது அருள் என்ற நீரால் கழுவியருளினாய்; அவ்வாறு செய்து நினது இரண்டு பாத தாமரைகளையும் என் தலைமீது சூடிக்கொள்ளும் பணியை எனக்கே அருளினாய்; அதனால் என் கல்மனமும் கரைந்து பத்தி பண்ணுமாறு ஊக்கினாய்; அதனால் என்னை வஞ்சித்து மேலும் மேலும் தொடர்ந்து வந்த பிறப்பைப் போக்கினாய்; நினது திருவருளின் பெருமையை எவ்வாறு புகழ்வேன்?
[27]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சொல்லும் பொருளும்என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியாஅரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

சொல்லையும் அதன் பொருளையும் போலத் துணைவராகிய எம்பிரானுடன் இடைபிரியாது இணைந்து நிற்கும் கொடி போன்ற அபிராமித் தாயே! அன்றலர்ந்த மலர்போன்ற நின் பாதத்தை இராப் பகலாகக் சிந்தித்துத் தொழுபவர்க்கே இவ்வுலகில் அழியாத அரசே போகம் கிடைக்கும்; மேல் நன்னெறியிற் செலுத்தும் தவம் கைகூடும்; பின்னர் சிவலோகமும் சிந்திக்கும்.
[28]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சித்தியும் சித்திதரும் தெய்வமாகித் திகழும்பரா
சத்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம்முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைதெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.

அபிராமித் தேவியே, அஷ்டமாசித்திகளும், அச்சித்திகளைத் தருகின்ற தெய்வங்களாகி விளங்கும் பராசக்தியும், அப்பராசக்தி கிளைத்தொங்கக் காரணமாக பரசிவமும், அப்பரசிவத்தைக் குறித்து முனைந்து தவம் செய்பவர்க்கு முக்தியும், அம்மூர்த்திக்கு விதைக்கும் விதையும், அவ்விதை முளைவிட்டுத் தோன்றிய ஞானமும், ஞானத்தின் உட்பொருளுமாகி நின்று பந்த முத்திகளில் காக்கின்ற திரிபுரசுந்தரி நீயேயல்லவா?
[29]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்றே தடுத்துஎன்னை ஆண்டுகொண்டாய் கொண்டது அல்லஎன்கை
நன்றே உனக்கு இனிநான் என்செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின்திருவுளமே
ஒன்றே பலவுருவே யருவேஎன் உமையவளே.

தனிப்பொருளே! பலவுருவாய் விளங்குபவளே! உருவமற்ற பொன்னே! உமை என்னும் என் அபிராமித் தாயே! அப்பொழுதே என்னைத் தீவினை சாராவண்ணம் தடுத்து ஆட்கொண்டாய்; இல்லை என்று சொல்வது உனக்கு நன்றன்று; ஆகையால், இனி நான் எது செய்தாலும் பாசக் கடலினுள்ளே சென்று விழுந்தாலும் முத்தி என்னும் கரையில் ஏற்றுதல் உன் கருணையே யாகும்.
[30]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங்கு
எமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனிஎண்ணுதற்குச்
சமையங்களு மில்லை ஈன்றெடுப்பாள் ஒருதாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே.

அபிராமி தேவியும் அத்தேவியை ஒரு பாகமாக உடைய எம்பிரானும் அர்த்தநாரீஸ்வர உருவில் எனக்குக் காட்சியளித்து என்னையும் தமக்கு அன்பு செய்து உய்யும்படி அனுக்கிரகித்தார். ஆகவே, இனி ஆராய்ந்து மேற்கொள்ளத்தக்க மதங்களும் இல்லை. இனி என்னை பெற்றெடுக்கும் தாயும் இல்லை; பசுமையான மூங்கில்போலும் கொழுவிய தோள்களையுடைய பெண்களின்மேல் வைத்த ஆசையும் இல்லை.
[31]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின்பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என்சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே.

சிவபெருமான் இடப்பாகம் இடங்கொண்டருளிய அபிராமி தேவியே! நான் ஆசையென்னும் கரைகாணாக் கடலில் விழுந்து இரக்கமற்ற யமனுடைய கைப்பாகத்தில் அகப்பட்டுப் பெருந்துன்பத்தில் ஆழ இருந்தேன்; அந்நிலையில் நின்னுடைய வாசமிக்க தாமரை மலர்போன்ற பாதத்தை என் தலைமேல் பதித்து என்னை ஆட்கொண்டாய்; அத்தகைய பேரன்பை எவ்வாறு புகழ்ந்து பாடுவேன்!
[32]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இழைக்கும் வினைவழியே அடும்காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம்எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

எந்தைச் சிவபிரானின் சித்தம் முழுவதும் நெக்குருகச் செய்யும் மணமிக்க மார்பங்களையுடைய யாமளையாகிய அபிராமி தேவியே! செய்த நல்வினை தீவினைகளுக்குக்கேற்பக் காலம் பார்த்துக் கொல்லும் யமன் யான் நடுங்குமாறு என்னை அழைக்கும் பொழுதும் மிக்க வருத்தத்தை அடையும்போழுதும், அன்னையே சரணம் என்பேன். ஓடிவந்து என்னை காத்தருள்வாய்.
[33]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வந்தே சரணம்புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும்பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

அபிராமி தேவி தன்னிடம் அன்பு கொண்டுவந்து 'சரணம்' என அடைக்கலம் புகும் அடியவர்களுக்கு அவர்கள் விரும்பியபடி வானுலக வாழ்வு கொடுத்து, தான் நான்முகனின் நாவிலும் தேன் துளிக்கும் துவளமாலையணிந்த மணிபொதிந்த திருமாலின் மார்பிலும், எம்பிரானின் இடப்பாகத்திலும், பொற்றாமரையிலும், அதனை மலர்த்தும் சூரியமண்டலத்திலும் சந்திர மண்டலத்திலும் விரும்பிச் சென்று வீற்றிருப்பாள்.
[34]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

அலைமோதும் பாற்கடலில் கொடிய கண்களையுடைய பாம்பணையில் வைணவி என்னும் பெயரோடு அறிதுயிலில் அமர்ந்திருக்கும் அபிராமி தேவியே! பிறைமதியின் மனம் வீசும் சிறந்த நின்னடிகளை எங்கள் சென்னியின் மேற்கொள்ள எங்களுக்கு ஒரு பாக்கியம் இருந்தவாறு என்னே! தேவர்களுக்கும் இந்தப் பேறு கிடைக்குமோ?
[35]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொருளே பொருள்முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்
மருளே மருளில் வருந்தெருளே என்மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளி யாகி இருக்கும்உன்றன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயா தனத்து அம்பிகையே.

பொருள்களின் உருவே! அப்பொருள்களைக் கொண்டு நுகரும் போகமே! அப்போகத்தால் உண்டாகும் மாயையே! அம்மாயையில் தோன்றும் தெளிவே! தாமரை மலரில் வீற்றிருக்கும் அபிராமி தேவியே! என் மனத்தில் மாயையின் காரியமாகிய அஞ்ஞான இருள் கொஞ்சமும் இல்லாமற் செய்யும் ஞான ஒளியே! பராகாசமாக விளங்கும் அம்பிகையே! உன்னுடையே திருவருள் எத்தகையது என்பதை யான் உணர முடியாது மயங்குகின்றேன்.
[36]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும்; எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே.

எட்டுத் திசைகளை மாத்திரமே உடையாகக் கொண்ட திகம்பரனாகிய எம்பிரானுடைய இடப் பாகத்தில் பொலிந்து தோன்றும் அபிராமி தேவியே! நின் கைகளில் அழகுற அணிந்திருப்பன கரும்பு வில்லும் மலரம்பும்; கமலமலர் போலும் திருமேனியில் தரிப்பது வெண்முத்துமாலை; இடையில் அணிவது பட்டும் மேகலையும்.
[37]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள்
அவளைப் பணிமின் கண் டீர் அமராவதி ஆளுகைக்கே.

பவளக் கொடிபோலும் சிவந்து இன்பம் பெருகும் சிவந்த வாயையும் குளிர்ந்த முறுவல் பூக்கும் வெண்மைமிகு பல்வரிசையையும் துணையாகக் கொண்டு எங்கள் சங்ககரனை அவனது யோகம் துவண்டு களையுமாறு குழைத்துத் தன் இடையையும் வருந்துமாறு சாய்க்கும் மார்பகங்களையுடையவள் அபிராமி தேவி. விண்ணுலகப் பேராட்சியை விரும்பினால் அந்த தேவியை வணங்குங்கள்.
[38]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன்றன் விழியின் கடையுண்டு; மேல்இவற்றின்
மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்புதொடுத்த வில்லான்பங்கில் வாள்நுதலே.

திரிபுரங்களை அழிக்கும் பொருட்டு அம்பு தொட்ட வில்லையுடைய சிவபிரானின் இடப்பாகத்தில் வாழும் அபிராமி தேவியே! என்னை அடிமை கொள்ள உன்னுடைய திருவடித் தாமரைகள் உண்டு; யமனிடமிருந்து மீள உன்றன் கடைக்கண் பார்வை உண்டு; முயன்றால் பலன் உண்டு; முயலாதது என் குறைதானேயன்றி உன் குறையன்று.
[39]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வாணுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும்அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம்அன்றே முன்செய் புண்ணியமே.

அபிராமி தேவி ஒளிமிக்க நெற்றிக் கண்ணையுடையவள்; தேவர்கள் யாவரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு எண்ணிய எம்பெருமாட்டி; அறியாமை நிறைந்த மனத்தால் காணமுடியாத கன்னி; அத்தேவியைத் தரிசிக்கவேண்டும் என்ற பக்தி எண்ணம் எனக்கு உண்டாயிற்றே! அது அல்லவா முற்பிறவிகளில் யான் செய்த புண்ணியம்!
[40]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணிஇங்கே வந்துதம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே.

மனமே! நம்பொருட்டு குவளை போன்ற கண்களையுடைய அபிராமி தேவியும் அவர் கணவரான செய்ய திருமேனியுடைய சிவபிரானும் அருகாக இங்கே வந்து நம்மை அடியார்கள் திருக்கூட்டத்தில் இருக்குமாறு செய்து நம் தலைமீது திருவடித் தாமரைகளை அடையாளமாகப் பதித்தனர். அவ்வாறு அவர்கள் அருள் புரிய நாம் புன்னியமல்லவா செய்திருக்கிறோம்?
[41]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே.

பரந்து கதிர்த்து ஒன்றற்கொன்று இணையாக வலிமையையும் மென்மையும் ஒருங்கே கொண்டு முத்துமாலை ஒளிவீசும் மார்பகங்களாகிய மலைகளைக் கொண்டு சிவபிரானது வலிமைமிக்க மனத்தை எண்ணியபடியெல்லாம் ஆட்டுவிக்கும் அபிராம சுந்தரியே! பாம்பின் படம்போலும் அகன்ற மடியை உடையவளே! குளிர்ந்த இன்மொழி பேசும் அம்பிகையே! வேதமாகிய சிலம்புகளை அணிந்துள்ள தேவியே!
[42]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பரிபுரச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப் புச்சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர்செம் பாகத்து இருந்தவளே.

மனத்தால் தீமை புரிதலையே கருதும் வஞ்சகர்களாகிய திரிபுரங்களை இடமாகக் கொண்ட அசுரர்கள் அஞ்சி அழியுமாறு மலை வில்லை வலைப்பவராகிய எரியொத்த செம்மேனி எம்மான் தன் இடப்பாகத்தை இடமாகக்கொண்டு உறையும் அபிராமி தேவியே! நீ சிலம்பணிந்த சிற்றடிகளும் பாசமும் அங்குசமும் உடையவள்! பஞ்ச பானங்களை உடையவள்; இனிமையான சொற்களைப் பேசும் திரிபுரசுந்தரி; சிந்துரம் போலும் சிவந்த திருமேனியுடையவள்.
[43]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தவளே இவள்எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும்ஆம்
துவளேன் இனியொரு தெய்வமுண் டாகமெய்த் தொண்டுசெய்தே.

அபிராமி தேவி எங்கள் சங்கரனார்க்கு இல்லத் துனைவியாகும் பேறுடையாள்; அவளே அவர்க்கு அன்னையும் ஆவாள்; ஆகையால் அத்தேவியே எல்லாக் கடவுளர்க்கும் மேலான இறைவியாவாள்; எனவே, வேறொரு முதற்தெய்வம் உண்டென்று கொண்டு அத்தெய்வத்திற்கு மெய்தொண்டு செய்து வாடமாட்டேன்.
[44]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொண்டு செய்யாது நின்பாதம் தொழாது துணிந்திச்சையே
பண்டு செய்தார்உளரோ இலரோ அப்பரிசடியேன்
கண்டு செய்தால்அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கைநன்றே பின் வெறுக்கையன்றே.

அபிராமி தேவியே! நினக்குத் தொண்டு செய்யாமல் நின் பாதம் தொழாமல் துணிந்து தம் மனக்கருத்துப்படியே தொழில் நிகழ்த்திய ஞானச் செல்வர்கள் பண்டைக் காலத்தில் இருந்தார்கள் அல்லவா? அவர்கள் செய்த முறைப்படியே நானும் செய்தால் அது நின்னால் வெறுக்கத் தக்கதா? பொறுத்து போற்றிக் கொள்ளத் தக்கதா? நான் அறியேன். ஆயினும் நான் விலக்கான செயல்களைச் செய்தாலும் நீ பொறுத்துக் கொள்ளுதலே நீதியாகும். என்னையும் வெறுத்தல் தகாது.
[45]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்தபொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான்உன்னை வாழ்த்துவனே.

நஞ்சை உண்டு கருத்த கண்டமுடைய சிவபிரான் தன் இடப்பாகத்தில் அமர்ந்த பொன்போன்ற அபிராமி தேவியே! வெறுக்கத்தக்க குற்றங்கள் செய்தபோதிலும் பெரியோர்கள் தம் அடியவர்களைப் பொருத்துக்கொள்வர்; அவ்வாறு பொறுத்துக் கொள்வது புதியதன்று. ஆகையாலும் நீ என்னைப் பொறுத்துக் கொள்ளாது விலக்கி ஒதுக்கினாலும் யான் உன்னை விடாமல் தொடர்ந்து வாழ்த்தி வழிபடுவேன்.
[46]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வாழும் படியொன்று கண்டுகொண்டேன் மனத்தேயொருவர்
வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

பேரின்ப வாழ்வு வாழ்வதற்கு பற்றுக்கோடாகிய ஒன்றை, அபிராமி தேவியே, ஞானக் கண்களால் கண்டுகொண்டேன்; அது மனத்தால் விரும்பி உருவாக்கப்படுவதன்று வாயால் சொல்லும் தகைமைத்தன்று; அப்பேரொளியே ஏழு கடல்களுக்கும் ஏழுலகிற்கும் எட்டு மலைகட்கும் எட்டாமல் அப்பாலாய் நின்று சூரிய மண்டலத்திலும் சந்திர மண்டலத்திலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.
[47]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்துநெஞ்சில்
இடரும்தவிர்த்து இமைப்போ திருப்பார் பின்னும் எய்துவரோ?
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

ஒளிமிக்கு விளங்கும் பிறைமதியை அணிந்த சடாமுடியையுடைய சிவபிரானாகிய செம்பவளக் குன்றில் பொருந்திப் படரும் வாசமிக்க பச்சைப் பசுங்கொடி போன்ற அபிராமி தேவியே நெஞ்சத்தில் பதித்து எவ்வகைச் சஞ்சலமும் நீங்கி யோகத்தின் கண் இமைபோதாயினும் அமர்ந்திருக்கும் அடியார்கள், குடலும் இறைச்சியும் இரத்தமும் மிக்க இவ்வுடலாகிய கூட்டிலே மீண்டும் பொருந்துவார்களோ?
[48]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குரம்பை அடுத்து குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும்அப் போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே.

யாழின் நரம்பைப் பொருந்தி ஏழிசை வடிவாய் நின்று அபிராமி தேவியே, இவ்வுடலைச் சேர்ந்து குடிபுகுந்த என் உயிர், எமனுக்கு வரம்பாக இருந்த ஆயுள் எல்லையை அடைந்து, மரணத்திற்கு அஞ்சி வருந்தும்போது, நின் வளைக்கையால் அஞ்சல் என்று அமைத்து, அரம்பை முதலான தேவமகளிர் சூழ வந்து அபயம் அளித்தருளவேண்டும்.
[49]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாயகி நான்முகி நாராயணி கைநளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கிஎன்று
ஆய கியாதி உடையாள் சரணம் அரண்நமக்கே.

உலக நாயகி; பிரம சக்தி; விஷ்ணு சக்தி; தாமரைக் கையில் மலரம்புகளை ஏந்துபவள்; சம்புவின் சக்தி; இன்பமளிக்கும் சங்கரி; பசுமைமிகு எழிலுடையாள்; நாகாபரணம் அணிந்தவள்; உலகளிக்கும் வாராகி; சூலமுடையாள்; மதங்க முனிவர் மகள் என்றெல்லாம் பல்வேறு புகழுடையாள் எங்கள் அபிராமி தேவி; அத்தேவியின் பதங்களே எங்களுக்குப் புகலிடமாகும்.
[50]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அரணம் பொருள்என்று அருள்ஒன் றிலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனித்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

திரிபுரங்கள் தமக்கு உறுதியான இடங்கள் என்று கருதியே அருளற்ற அசுரர்களின் வலிமை அழியுமாறு சினந்து முப்புரங்களும் ஒருங்கே குலையச் செய்த சிவபிரானும் விஷ்ணுவும் அடைக்கலம் அடைக்கலம் என வேண்டி நின்ற தலைவி எம் அபிராமி தேவி. அத்தேவியின் அடியார்கள் இவ்வுலகில் மரணமும் பிறவியும் இனி அடையார்கள்.
[51]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவம்உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

தேர், குதிரை, யானை, மணிமுடி, சிவிகை, சிற்றரசர்கள் கட்டும் கப்பம், மதிப்புமிக்க முத்து மலைகள் முதலியன பிறை முடித்த பெம்மானின் திருதேவியாகிய அபிராமி அம்மையின் திருவடித் தாமரைகளில் பக்தி செய்யும் பேறு பெற்றவர்கட்குரிய அடையாளங்களாவன.
[52]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முளையும்முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில்வைத்துத்
தன்னந் தனியிருப்பார்க்கு இதுபோலும் தவமில்லையே.

அபிராமி தேவியின் நுண்ணிடையிற் சாத்திய பட்டுடையையும் பெரிய மார்பகங்களையும் முத்து மாலைகளையும் பிச்சிப்பு மலையையும் கரிய கூந்தலையும் முக்கண்களையும் கருத்தில் தியானம் செய்து கொண்டு தன்னந்தனியே யோகநிலையில் அமர்ந்திருப்பவர்களுக்கு இது போன்ற பெரிய தவம் வேறில்லை.
[53]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இல்லாமை சொல்லி ஒருவர்தம் பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம் பால்ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

ஒருவரிடம் சென்று தன் ஏழ்மையைச் சொல்லி இழிவு படாமலிருக்க விரும்பினால், என்றும் தவம் செய்யாமையையே பழகிய கயவர்கல்பால் யான் ஒருபோதும் செல்லாதபடி என்னைத் தடுத்தாட்கொண்ட திரிபுரையாகிய அபிராமி அம்பிகையின் பாதங்களைப் புகலாக அடையுங்கள்.
[54]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மின்னா யிரம்ஒரு மெய்வடி வாகி விளங்குகின்ற
தன்னாள் அகமகிழ் ஆனந்த வல்லி அருமறைக்கு
முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்விதன்னை
உண்ணாது ஒழியினும் உன்னிலும் வேண்டுவது ஒன்றிலையே.

அபிராமி தேவி ஆயிரம் மின்னல்கள் ஓருருக்கொண்டு விளங்குவது போலும் ஒளிமிக்க திருமேனியுடையவள்; அடியார்களின் அகமகிழ்ச்சிக்கு மூலகாரனமாயுள்ள ஆனந்தவல்லி; வேதத்தின் ஆதியாகவும் இடையாகவும் முடிவாகவும் விளங்குகின்ற முதல்வி; அத்தேவியை உயிர்கள் தம் மயக்கத்தால் போற்றாதொழிந்தாலும் புண்ணிய வலிமையால் போற்றினாலும் அதனால் அத்தேவிக்கு வேண்டிய பொருள் ஒன்றுமில்லை.
[55]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றா லிலையில் துயின்ற பெம்மானும் என்ஐயனுமே.

அபிராமி தேவி, பராசக்தி என்ற ஒரே வடிவாகவும் ஏனைப் பல சக்திகளின் வடிவமாகவும் உலகெங்கும் பரந்து நிற்கின்றாள்; யாவற்றினின்றும் வேறாகவும் விளங்குகின்றாள்; அத்தகைய எம் பிராட்டி என் மனத்தகத்தே நீங்காது நிறைந்திருக்கின்றாள்;அருள் புரிகின்றாள்; இஃதொரு வியப்பன்றோ? இதன் உட்பொருளை ஆலிலையின்மேல் அறிதுயிலில் அமர்ந்த பெருமானும் என் அப்பனாகிய சிவபிரானும் அறிவர்.
[56]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஐயன் அளந்தபடி யிருநாழி கொண்டு அண்டம்எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையுங் கொண்டு சென்றுபொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே.

அபிராமி தேவியே! ஏகாம்பரநாதர் அளித்த இருநாழி நெல்லைக்கொண்டு அண்டமெல்லாம் உய்யும்படிக் காமாட்சி என்னும் பெயருடன் அறம் செய்யும் உன்னையும் புகழ்ந்து போற்றி தகுதியற்ற நான் ஒருவனிடத்தும் சென்று உள்ளதையும் இல்லதையும் சொல்லிப் பாடும்படி வைத்தனையே; இதுவா உன்றன் மெய்யருள்?
[57]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அருணாம் புயத்தும்என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருனாம் புயமுலைத் தையல்நல்லாள் தகைசேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.

செந்தாமரையிலும் என் மனத்தாமரையிலும் அமர்ந்திருக்கும் தாமரைமொக்குப் போலும் சிறந்த மார்பகங்களையுடைய அபிராமி தேவியின் தகுதிமிக்க கண்களாகிய கருணைத் தாமரையும் முத்தாமரையும் கரத்தாமரையும் பாத தாமரையும் அல்லாமல் வேறொரு புகலிடமும் எனக்கில்லை.
[58]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைகின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பும் இக்கு அலர் ஆகநின்றாய் அறியார்எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

நீண்ட கரும்புவில்லும் ஐந்து மலரம்புகளும் கொண்ட அபிராமி தேவியே! நின் தவநெறியேயன்றி அடைக்கலம் வேறொன்றில்லையென அறிந்தும் அவ்வழியில் மனத்தால் முயன்று பயில எண்ணவில்லை; பேதையர் எனினும் செம்பஞ்சுக் குழம்பு ஒளி வீசும் அடிகளையுடைய பெண்கள் தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்கமாட்டார்கள்.
[59]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பாலினும் சொல்இனியாய் பனிமாமலர்ப் பாதம்வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம்ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன்முடை நாய்த்தலையே.

பாலைக் காட்டிலும் இனிய சொற்களைப் பேசும் அபிராமியே, நீ நின் குளிர்ச்சி பொருந்திய மலர்ப்பாதங்களை, திருமாலும் மற்றைத் தேவர்களும் வணங்கும் பெருமை மிக்க கொன்றையந்தார் சூடிய எம்பெருமான் திருமுடிமீதும் பதிப்பதுண்டு; நின் திருவடிக்கண் நின்று வேதங்கள் போற்றிப் புகழும் நான்கு பிரணவ பீடங்களிலும் பதிப்பதுண்டு; இன்றோ அடியேனது நாற்றமிகு நாய்த்தலைபோலும் தலையின்மிது புனிதமான நின் பாதத்தைப் பதித்தனை; அஃது முன்கூரியவைகளைக் காட்டிலும் சிறந்ததோ?
[60]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால்திருத் தங்கைச்சியே.

உலகத்திற்கெல்லாம் தாயாகிய அபிராமி தேவியே! மலைமகளே! திருமாலுக்குத் தங்கையே! நாய்போல் கீழ்ப்பட்ட என்னையும் ஒரு பொருளாகக் கருதி நீயாகவே வலியவந்து என் நினைவு இல்லாமலே என்னைத் தடுத்து ஆட்கொண்டாய்; பேய்போலும் சஞ்சலம் மிக்க நான் உன்னை உள்ளபடி அறியும் பேரறிவு கொளுதினாய்; நான் பெற்றது பெறுதற்கரிய பேறு அல்லவா?
[61]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்துமத
வெங்கண் கரியுரி போர்த்தசெஞ் சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே.

பொன்மலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவனும், மதயானையின் தோலையுரித்துப் போர்த்துக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது உடல் முழுவதும் குரும்பை போன்ற மார்பகங்களால் குழைத்துக் குறியிட்ட நாயகி அபிராமி தேவியே; அத்தேவியின் சிறந்த மலர்போலும் கையில் விளங்கும் கரும்பும் அஞ்சம்பும் எப்போதும் என் மனத்தில் நிலைத்திருக்கின்றன.
[62]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேறும் படிசில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்கு
கூறும் பொருள் குன்றில் கொட்டும்தறி குறிக்கும்சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேரும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.

அறுவகைச் சமயத்திற்கும் அபிராமி தேவியே தலைவி என்பது அறிந்திருந்தும் வேறு சமயங்களும் மெய் என்று கொண்டாடும் பேதையர்க்குத் தெளிவான காரணங்கள் காட்டி மேல் அடையத்தகும் நற்கதிக்கு மூலமான உண்மைகளையும் எடுத்துக் கூறுதல் "மலையை உடைத்துவிடுகின்றேன் என்று மரத்தடியால் அதனைத் தாக்குவது" போலும்.
[63]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்கஅன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண் டேன்நின் புகழ்ச்சியன்றிப்
பேணேன் ஒருபொழுது தும் திருமேனி ப்ரகாசமன்றிக்
காணேன் இருநிலமும் திசைநான்கும் ககனமுமே.

அபிராமி தேவியே! வீணாக பலி கொள்ளும் தெய்வங்களுக்கு அன்பு பூணேன்; உனக்கே அன்பு கொண்டேன்; நின் புகழேயன்றி வேறொன்றையும் போற்றமாட்டேன்; நினது திருமேனித் திருவொளியேயன்றி விண்ணிலும் மண்ணிலும் நான்கு திசைகளிலும் வேறெதையும் காணேன்.
[64]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன்அங்கம்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்
முகனுமுந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண் டாயதன்றோ வல்லி நீசெய்த வல்லபமே.

ஆனந்தவல்லியாகிய அபிராமி தேவியே! மன்மதன் உருவத்தைச் சிவபிரான் மண்ணுலகு விண்ணுலகு முதலிய எவ்வுலகத்தவரும் அறியுமாறு எரித்தார்; ஆயினும், நீ செய்த செயலால் அப்பெருமானுக்கு ஆறுமுகங்களும் பின்னிரு கைகளும் உடைய ஞானக் கொழுந்தாகிய மகன் தோன்றினான் அல்லவா? என்னே நினது அன்பு!
[65]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின்மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும்பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன்தொடுத்த
சொல்லவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.

பசும்பொன் மலையை வில்லாக உடைய சிவபெருமான் தன் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அபிராமி தேவியே! யான் கல்வியறிவால் ஆற்றல் பெற்றவன் அன்று; சிறியவன்; நின்னுடைய சிவந்த மலர்ப்பாதங்களிலே அல்லாமல் வேறெதிலும் பற்றற்றவன்; தீவினை மிக்கவன்; நான் தொடுத்த இப்பாமாலை சுவையற்ற வீண் பொருள்; ஆயினும், தேவியே! நின்னைக் குறித்த தோத்திரங்கள் ஆதலின் வெறுத்தொதுக்காது ஏற்றருளவெண்டும்.
[66]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தோத்திரம் செய்து தொழுதுமின் போலும்நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மைகுலம்
கோத்திரம் கல்வி குணம்குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழ லாநிற்பர் பாரெங்குமே.

அபிராமி தேவியே! மின்னற்கொடி போலும் ஒளிமிக்கு விளங்கும் நின்றன் திருமேனியைத் தொழுது தோத்திரம் செய்து ஒரு மாத்திரை நேரமேனும் மனத்தில் வைத்துத் தியானம் செய்யாதவர்கள் தங்களுடைய கொடை, குளம், கோத்திரம், கல்வி, குணம் முதலிய யாவும் குன்றி வீடு வீடாகப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நின்று பிச்சை எடுப்பார்கள்.
[67]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பாரும் புனலும் கனலும்வெங் காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவையொளி யூரொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே.

மண்ணும் மனமும், நீரும் சுவையும், நெருப்பும் ஒளியும், காற்றும் தொடு உணர்ச்சியும் வானும் ஒலியும் ஒருங்கிணைந்து நிற்குமாறு எப்பொருளினும் கலந்து நிற்கும் தலைவி அபிராமி தேவியே; அத்தேவியே சிவகாமசுந்தரி; அந்த அம்பிகையின் சிற்றடிகளே புகலிடம் என்று சார்ந்த தவமுடையவர்களுக்கு அடையமுடியாத செல்வம் ஏதும் இல்லை.
[68]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

கருமேகம் போலும் அழகிய கூந்தலுடைய அபிராமி தேவியின் கடைக்கண்கள் மெய்யடியார்கட்குச் செல்வத்தைக் கொடுக்கும்; கல்வியைக் கொடுக்கும்; ஒரு போதும் தளராத ஊக்கத்தைக் கொடுக்கும்; தேவ வடிவமும் கொடுக்கும்; நெஞ்சத்தில் வஞ்சகமில்லாத உற்றார் உறவினர்களைக் கொடுக்கும்; மேலும் எவையெல்லாம் நல்லனவோ அவை அனைத்தையும் கொடுக்கும்.
[69]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கண்களிக் கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக் கும்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களிற் றோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

பண்ணும் விரும்புகின்ற வீணை அமர்ந்த கை, அழகிய மார்பகங்கள், கண்ணுக்கினிய பச்சை நிறம் ஆகிய வற்றோடு கூடி மதங்கர் குலத்தில் தோன்றிய எம்பெருமாடியாகிய அபிராமி தேவியின் பேரழகைக் கடம்பவனம் என்ற மதுரையில் என் கண்கள் இரண்டும் களிக்குமாறு யான் கண்டு கொண்டேன்.
[70]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியி
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றநெஞ்சே யிரங்கேல் உனக்கு என்குறையே.


ஊக்கமும் குறைந்து ஏக்கம் மிகுந்து நிற்கும் மனமே அஞ்சற்க; திருமேனியழகிற்கு யாரும் ஈடாகாத ஆனந்தவள்ளியும், வேதங்களின் அடி, இடை, முடி ஆகிய எங்கும் நடமாடிப் பழகி அதனால் சிவந்த பாத தாமரைகளை உடையவளும், குளிர்ந்த நிலவின் கீற்றைத் திருமுடியில் அணிந்தவளும் ஆகிய இளமையும் மென்மையும் அழகும் கொழிக்கும் அபிராமி தேவி என்னும் கொம்பு நமக்கு உற்றவிடத்தில் ஊன்றுகோலாக இருக்க உனக்கு ஏது குறை?
[71]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்குறை தீரநின்று ஏத்துகின்றேன் இனியான்பிறக்கின்
நின்குறையே அன்றி யார்குறைகாண் இருநீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன்குறைதீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே.

அகன்ற வானத்தில் தோன்றும் மின்னலும் தடிப்புடையது என அதற்கொரு குறை காட்டும் நுணுகிய இடையினையுடைய மென்மையான இயல்பினை உடைய அபிராமி தேவியே! எம் தலைவனாகிய சிவபிரான் தன் குறை தீரும்போருட்டுத் தன் சடையின்மேல் வைத்துகொண்டு நின் பாத தாமரையை என் குறை தீருமாறு போற்றித் துதிக்கின்றேன்; அவ்வாறு துதித்தபின்னும் யான் மீண்டும் பிறந்தால் அது நினது குறையேயன்றி வேறு யார் குறை?
[72]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்றுவைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளிசெம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே.

அபிராமி தேவி திரிபுரை என்ற பெயர் கொண்டவள். அத்தேவியினது நெற்றிக் கண்ணும் மற்ற இரு கண்களும் நான்கு கைகளும் செந்நிறம் கொண்டன; மாலை கடம்ப மாலை; படை பஞ்சபாணங்கள்; வில், கரும்பு. தேவியை மேலாகத் துதிக்கும் நேரம் பைரவர்க்குரிய நள்ளிரவு நேரம்; அந்த அம்பிகை எமக்கென்று வைத்த செல்வம் திருவடித் தாமரைகளே.
[73]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

முக்கண் படைத்த பரமனும் வேதமும் திருமாலும் பிரமனும் போற்றித் துதிக்கும் அபிரமவல்லித் தாயின் திருவடிகளைச் சேர்தலே பிறவி எடுத்ததனால் ஆகிய பயன் என்ற கொள்கை உடைய சிறந்த அடியார்கள், அரம்பை முதலிய தேவ மகளிர் ஆடவும் பாடவும் அவற்றைக் கண்டு களித்துக் கற்பகச் சோலையில் பொற்கட்டில் இனிதாகத் தங்குவார்களோ?
[74]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தங்குவர் கற்பகத் தருவின் நீழலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

பெரிய மலைகளையும் உப்புக் கடலையும் பதினான்கு உலகங்களையும் பெற்ற திருவயிற்றையும் மணமிக்க மலர்களை முடித்த கூந்தலையும் உடைய அபிராமி தேவியின் திருமேனியை தியானித்தவர்கள் கற்பக நீழலில் தங்கியின்பமாய் இருப்பார்கள்; இடைவிடாத பிறவியை, பெறுகின்ற தாயாரில்லாமற் செய்து வேரறுப்பார்கள்.
[75]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறித்தேன் மனத்தில்நின் கோலம்எல்லாம் நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப் பிரான்ஒரு கூற்றைமெய்யில்
பறித்தே குடிபுகு தும் பஞ்ச பாண பயிரவியே.

வண்டு குடைந்து மணமிகு தேன்சொறியும் கொன்றை மாலையணிந்த சடைமுடியுடைய சிவபிரான் ஒரு பாகத்தைப் பறித்து அதில் குடியாய்ப் புகுந்த பஞ்சபாணங்களையுடைய பைரவியாகிய அபிராமித் தாயே! நினது திருக்கோலம் யாவற்றையும் என் மனதில் குறித்துத் தியானிக்கின்றேன்; நின் திருவுள்ளக் குறிப்பறிந்து இயமன் வரும் நேர்வழி இன்னதென்றுணர்ந்து அவன் வாராமல் தடுத்துவிட்டேன்.
[76]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணிவஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.

அபிராமி தேவியே! நின் அடியார்கள் நினது குற்றமற்ற வேதங்களில் பயின்ற திருநாமங்களாகிய பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சகம் உடையவர்களது உயிரைப் பலியாகக் கொள்ளும் சண்டி, காளி, ஒளிவீசும் கலை வீறுடைய வயிரவி, சூரிய சந்திரமண்டலங்களில் வாழும் மண்டலி, கடம்ப மாலையை அணிந்த மாலினி, சூலி, வாராகி என்ற பெயர்களையெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லிப் போற்றித் துதிப்பார்கள்.
[77]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதி வைத்தேன்என் துணைவிழிக்கே.

மாணிக்கச் செப்பு போலவும் தங்கக் கலசம் போலவும் விளங்குகின்ற மார்பகங்களில் பூசும் சிறந்த மணமுடைய சந்தனக் கலவைகள் விளங்குகின்ற அபிராமிவல்லித் தாயே! என் இரு விழிகளிலும் எங்கு நோக்கினும் நின் திருவுருவே தோன்றுமாறு நினது முத்துக் கோப்பு, வயிரைக் குழை மதர்த்த கருணைமிகு கடைக் கண்கள், பவழம்போலும் திருவாய் புன்முறுவலாகிய நிலா ஆகியவற்றை எழுதி வைத்தேன்.
[78]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.

அபிராமிவல்லியம்மைக்குத் திருக்கண்களில் கருணை உண்டு; வேதம் விதித்த விழியில் அத்தேவியைப் போற்றித் துதிக்க மனமும் உண்டு. அத்தகைய சிறப்பு எமக்கு இருக்க பழியும் பாவமும் விளைக்கும் செயல்களைச் செய்து வருந்திப் பாழ் நரகக் குழியில் அழிந்து வாடும் பேதையர்களோடு இனி நமக்கென்ன தொடர்பு?
[79]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கூட்டியவா என்னைத் தன்னடி யாரில் கொடியவினை
ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.

பொற்றாமரைப் பூவில் பொருந்தி வாழும் அரிய அழகு வாய்ந்த அபிராமி தேவியே! என்னை நின் கூட்டத்துள் சேர்த்தது வியப்பு; நான் செய்த கொடிய வினைகளை ஒழித்தது வியப்பு; ஒன்றுக்கும் பற்றாத எனக்கு உன் உண்மை உருவை உள்ளபடி கண்களுக்குத் தெரியும்படிக் காட்டியது வியப்பு; நின்னைக் கண்ட கண்ணும் மனமும் பெருமகிழ்ச்சியில் திளைக்கின்றனவே; இவ்வாறெல்லாம் என்னை நாடகம் ஆடச் செய் தனையே. நின் தண்ணளியை என்னென்பேன்.
[80]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அணங்கே அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனதுஉனது என்றிருப்பார்சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவொன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே.

அபிராமித் தாயே! மற்ற சக்திகள் நின் பரிவார தேவதைகள் ஆதலின் அவர்களை வணங்கமாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; என்னிடம் நீ வைத்த பெருங்கருணையால் நெஞ்சத்தில் கள்ளம் கொண்டவருடன் இணங்கமாட்டேன்; நான் அறிவற்றவனாயினும் "என் பொருளெல்லாம் நின் பொருளே" என்றிருக்கும் சில ஞானிகளுடன் பிணங்காது இணங்கி உறவாடுவேன்.
[81]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும்நின்
ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின்விரகினையே.

வண்டுகள் மொய்க்கும் கமலத்தில் வாழும் அபிராமி தேவியே! எல்லாவுலகும் நின்றன் ஒளியாக விளங்கப் பேரொளி வீசும் நின் திருமேனியின் பேரெழிலை நினைக்கும் தோறும் களிப்பின் மிகுதியால் அந்தக்கரணங்கள் பொருமித் துள்ளிக் கரை கடந்து பரவெளியில் ஒன்றி நிற்கின்றன; இவ்வாறு பேரருள் காட்டி இயற்றிய நின் உபாயத்தை யான் எவ்வாறு மறப்பேன்?
[82]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர்எவரும்
பரவும் பதமும் அயிரா வதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே.

அபிராமித் தாயே! நின் வாசமிகு திருவடித் தாமரைகளில் தேன் கொழிக்கும் புது மலர் இட்டு அருச்சித்து பகலுமாகத் தியானம் செய்ய வல்ல பெரியோர்கள் தேவர்கள் யாவரும் போற்றும் இந்திர பதவியும், ஐராவதம் என்ற யானையும், ஆகாய கங்கையும், வலிப வச்சிராயுதமும், கற்பகச் சோலையும் தமக்குரியனவாகப் பெற்று வாழ்வர்.
[83]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடை யாளைத் தயங்குநுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மானிடை யாளைஇங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.

அபிராமி தேவி என்னைப் பண்டே அடிமை கொண்டவள் இடையில் ஒசிந்து நிற்கும் செம்பட்டை உடுத்தியிருப்பவள்; ஒளி வீசும் பிறைச்சந்திரனைச் சடைமீது கொண்டவள்; வஞ்சகர்களின் நெஞ்சில் ஒரு போதும் சேராள்; ஒளி விளங்குகின்ற நுண்ணிய நூல் போலும் இடையை உடையவள்; எம்பெருமானாகிய சிவபிரானின் இடப் பாகமே குடிகொண்டவள்; இனி என்னை இவ்வுலகில் பிறக்குமாறு படைக்கமாட்டாள்; அத்தகைய தேவியைத் தொழுது போற்றி உங்களையும் மீண்டும் படைக்காதிருக்கும் பொருட்டு அவளைக் குறித்துத் தியானம் செய்யுங்கள்.
[84]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பார்க்கும் திசைதொறும் பாசாங் குசமும் பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே.

அபிராமித் தாயே! நான் பார்க்கும் திசைகள்தோறும் நின் படைகளாகிய பாசமும் அங்குசமும் வண்டு பொதுளும் மலரம்புகள் ஐந்தும் கரும்பு வில்லும் என் துன்பங்கள் யாவற்றையும் போக்கும் திரிபுரையாகிய நின் திருமேனிப் பேரெழிலும் சிற்றிடையும் கச்சணிந்த குங்குமக் குழம்பு மணக்கும் மார்பகங்களும் அவற்றின் மேலே முத்துமாலையுமே தோன்றுகின்றன.
[85]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மாலயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

பால், தேன், பாகு ஆகியவைகளைப் போல மிக இனிய மென்மையான மொழி பேசும் அபிராமித் தாயே! யமன் கோபித்துக் கிளையாகப் பிரிந்து நிற்கும் வேலை என்மேல் விடும்போது திருமாலும் பிரமனும் வேதங்களும் மற்றை வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும், சங்கமணிந்த கையையும் கொண்டு எனக்குக் காட்சி தந்தருளவேண்டும்.
[86]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்திஎன்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால்மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படியொரு பாகம்கொண் டாளும் பராபரையே.

நெற்றிக் கண்ணால் காமனை எரித்த எம்பிரானாகிய சிவபிரானது அழிக்கமுடியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவரது இடப்பாகத்தில் இடங்கொண்டு ஆளும் அபிராமி தேவியே! வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத நின் திருவுருவம் என்னுடைய கண்களுக்கும் செய்த பூசனைக்கும் வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சியளிக்கின்றதே.
[87]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பரமென்று உனையடைந்தேன் தமியேனும்உன் பத்தருக்குள்
தரமன்று இவன்என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில்அயன்
சிரம்ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே.

பகைவர்களது முப்புறமும் நீறுபட்டு அழியுமாறு மேருமலையை வில்லாக வளைத்தவரும் தாமரை மலரில் வாழும் பிரம தேவனுடைய தலையோன்றைக் கிள்ளி அழித்தவரும் ஆகிய சிவபிரான் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருக்கும் அபிராமி தேவியே! யாரும் துணையற்ற யான் " நீயே கதி" என்று உன்னை அடைக்கலமாக அடைந்தேன்; என்னைத் தகுதியற்றவன் என்று ஒதுக்கிவிடாமல் அருளவேண்டும்; ஒதுக்கி விடுதல் நின் அருட்கு இழுக்கு ஆகும்.
[88]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிறக்கும் கமலத் திருவே நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம்அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர்உற வற்றறிவு
மறக்கும் பொழுதென்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

சிறந்த தாமரையில் திருவாய் வீற்றிருக்கும் அபிராமி தேவியே! நான் உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பற்று அறிவு மறதி மிகும்போது நினது சேவடியைச் சென்னியில் வைத்தற் பொருட்டு அதற்கு அனுகூலமாகப் பற்றின்மையை அனுக்கிரஹிக்கும் நின் துணைவரும் நீயும் துரியாதீத நிலையில் அறிதுயிலில் யான் அமரும் போற்றியருள வருந்தியேனும் எனக்குக் காட்சியளித்தருள வேண்டும்.
[89]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வருந்தா வகைஎன் மனத்தா மறையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிட மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தைத் திருமால் தேவர்கட்குக் கொடுக்க மூலகாரணமாக இருந்த அபிராமி தேவி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் உள்ளத்தாமரையில் எழுந்தருளித் தன் பழைய உறைவிடமே போல எண்ணி உறைந்தருளினாள். ஆகையால், இனி எனக்கு வாய்க்காத பொருள் ஏதும் இவ்வுலகில் இல்லை.
[90]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மெல்லிய நுண்ணிடை மின்அனை யாளை விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன்அனை யாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழும்அடி யாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.

அபிராமி தேவியின் மின்னல் போலும் மெல்லிய மருங்கினை உடையவள்; விரிந்த சடைமுடியுடைய சிவபிரானுடன் இணைந்து நிற்கும் பொன்னிற மிகுந்த மார்பகங்களை உடையவள்; அத்தகைய அம்பிகையை வேத விதிப்படித் தொழும் அடியார்க்கும் அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகளும் இனிது முழங்கியோங்க வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மீது ஊர்ந்துசெல்லும் சிறந்த இந்திர பதவியைப் பெறுவார்கள்.
[91]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பதத்தே உருகிநின் பாதத்திலேமனம் பற்றிஉன்றன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனியான்ஒருவர்
மதத்தே மதிமயங்கேன் அவர்போன வழியும்செல்லேன்
முதத்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.

தலைவர்கள் எனப்படும் திரிமூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் துதிக்கின்ற புன்முறுவல் பூக்கும் அபிராமி தேவியே! என் மனம் பரிபாகம் பெற்று நெக்குருகி நின் பாவங்களிலேயே பற்றுமிக்கு நின் திருவருள் ஆணைப்படியே ஒழுகுமாறு என்னைத் தொண்டாக ஆக்கிக் கொண்டாய். ஆகவே, இனி நான் மற்றொருவருடைய மதத்தின் சிறப்பு கண்டு மயங்க மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலும் செல்லமாட்டேன்.
[92]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நகையே இஃதிந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவில்அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதுநாம்
மிகையே இவள்தம் தகைமையை நாடி விரும்புவதே.

உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமியம்மைக்கு ஒளிமிக்க மார்பகங்கள் தாமரைமொக்கு எனவும், கருணை ததும்பி முதிர்ந்த கண்கள் மருட்சிமிக்க மான்கண்கள் எனவும், முடிவு இல்லை எனவும், அவ்வாறே பிறப்பும் இல்லை எனவும், கவிஞர்கள் கூறுகின்றனர். அஃதேயெனின் அந்த அம்பிகையை மலையரசன் மகள் எனக் கூறுதல் பொருந்தாது; இவையெல்லாம் ஒன்றற்கொன்று மாறுபட்ட கூற்றுகள். இக்கூற்றுகளை எண்ணும் போது பரிகாசச் சிரிப்பே உண்டாகின்றது. நாம் இனி விரும் பத்தக்கது இத்தகைய கற்பனைகளை உதறித் தள்ளி அம்பிகையின் உண்மை நிலையை ஆராய்ந்து போற்றுவதேயாகும்.
[93]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விரும்பித் தொழும் அடியார் விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன்சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம்நன்றே.


அபிராமி தேவியே! போற்றித் தொழும் அடியவர்கள் தம் கண்களில் நீர் பெருகி உடலில் புளகம் போர்த்து ஆனந்தம் ததும்பி அறிவு மறந்து வண்டைப்பொற் களித்து சொல்லும் தடுமாறி முன் சொல்லிய யாவற்றையும் தருகின்ற பித்தரைப் போலும் தோற்றமளிப்பர் என்றால் அத்தகைய பேரானந்தப் பெரும் பேற்றுக்குக் காரணமான அம்பிகையின் சமயமே சாலவும் சிறந்ததாகும்.
[94]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயு மில்லை உனக்கேபரம் எனக்கு உள்ளஎல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாதகுணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.

அழியாத குணக்குன்றே! அருட்கடலே! இமவான் பெற்றெடுத்த இளமைமிகு அபிராமி தேவியே! எனக்குரிமை என்று கருதியிருந்த பொருள்களனைத்தையும் அன்றே உன்னுடையது என்று கொடுத்துவிட்டேன்; இனி நல்லதே வந்தாலும் தீயதே கிடைத்தாலும் நான் உணரத்தக்கது ஒன்றும் இல்லை. நான் உனக்கே பாரம்.
[95]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கோமள வல்லியை அல்லியந் தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.

அபிராமி தேவி அழகும் இளமையும் மிக்க கோமளவல்லி; மென்மையான தாமரையைக் கோயிலாகக்கொண்டு வீற்றிருக்கும் யாமளை; குற்றமற்றவள்; படத்தில் எழுதமுடியாத பசிய எழில்மிகு திருமேனி உடையவள்; சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவள்; அத்தகைய அம்பிகையைத் தம்மால் முடிந்த அளவும் தொழுபவர்கள் ஏழுலகுக்கும் தலைவராவர்.
[96]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

புண்ணியம் பல இயற்றி அவற்றின் பயனைத் தமக்கு உரிமையாக்கிக் கொண்ட சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், இந்திரன், மலரில் வாழும் பிரமன், முப்புரங்களை எரித்த சிவபிரான், முரணையொருத்த திருமால், அகத்தியன், கொன்று போர் புரியும் வேலையுடைய கந்தன், கணபதி, மன்மதன் முதலிய எண்ணற்றவர் எம் அபிராமி தேவியைப் போற்றித் துதிப்பர்.
[97]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகஅறியா மடப் பூங்குயிலே.

உண்மை பொருந்திய நெஞ்சில் அல்லாமல் வஞ்சகர்களுடைய பொய் மிகுந்த மனத்தில் ஒரு போதும் புக அறியாத இளமைமிகு பூங்குயில் போன்ற அபிராமித் தாயே! நின் பாதபத்மங்களை வருடித் தன் தலையிற் சூடிக்கொண்ட எம்பிரானாகிய சங்கரற்குக் கையில் இருந்த தீயும் தலையிற் குடியிருந்த கங்கையும் எங்கே ஒளிந்துக்கொண்டனவோ?
[98]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குயிலாய் இருக்கும் கடம்பா டவியிடைக் கோலஇயல்
மயிலாய் இருக்கும் இமயா சலத்திடை வந்துதிந்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீதன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

கயிலையங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு அன்று இமவான் திருமணம் செய்து கொடுத்த உமையாகிய அபிராமி தேவி கடம்ப வனத்தில் குயிலாய் இருப்பாள்; இமய மலையில் மயிலாய் இருப்பாள்; விண்ணில் உதய சூரியனாய் இருப்பாள்; தாமரையின்மீது அன்னமாய் இருப்பாள்.
[99]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குழையத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.

இலந்தழையும் கொன்றை மலரும் இணைத்துத் தொடுத்து மாலையின் மணம் கமழும் மார்பகங்களையுடைய அபிராமி அம்மையின் மூங்கில்போலும் பசிய தோள்களும் கரும்பு வில்லும் ஒருவரையொருவர் விரும்புமாறு செய்யும் வாசனைமிக்க மலரம்புகளும் வெண்ணிறம் காட்டும் புன்னகையும் மானையொத்த மருண்ட கண்களும் என் மனத்தில் எப்போதும் தோன்றுகின்றன.
[100]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நூல் பயன்

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம்எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங் குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு வார்ஒரு தீங்கில்லையே.

அபிராமவல்லி எங்கள் தாய்; எல்லா அண்டங்களையும் பெற்றெடுத்தவள்; மாதுளம்பூப் போலும் நிறமுடையவள்; உலகமெல்லாம் காப்பவள்; அழகிய கைகளில் பஞ்சபானங்களையும் பாசத்தையும் அங்குசத்தையும் கரும்பு வில்லையும் வைத்திருப்பவள்; மூன்று கண்களையுடையவள்; அந்த அம்பிகையைத் தொழுவோர்க்கு ஒரு தீங்கும் உண்டாகாது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~